வெசாக் பண்டிகை: நாடளாவிய விசேட பாதுகாப்பு திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொலிஸார் நாட்டின் அனைத்து 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டத்தை தற்போது தயாரித்து செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், வழிபாட்டு தலங்கள், வெசாக் வலயங்கள் மற்றும் தன்சல்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபாயகரமான முறையில் அல்லது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்கும் நபர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் வழங்கலாம் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதற்காக 070-4755600 என்ற வாட்ஸ்அப் இலக்கம், 119 மற்றும் 188 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் மூலம் புகார்களை அளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




