எரிபொருள் விலை குறைப்பு செப்டெம்பர் வரை சாத்தியமில்லை

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அண்மைக் காலமாக குறைவடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலைகளை உடனடியாக குறைக்கும் வாய்ப்பு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இன்று (29) செய்தியாளர்களிடம் பேசிய CPC தவிசாளர் மயூரா நெத்திகுமாரகே, இந்த மாதத்திலும் அல்லது செப்டெம்பர் மாதம் வரையும் எரிபொருள் விலை குறைப்பு எதிர்பார்க்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச சந்தை நிலவரங்கள் இன்றைய பிற்பகுதியில் தான் முழுமையாக வெளியாகும் என்றும், வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 31ஆம் திகதியே விலை மீளாய்வு செய்யப்படும் என்றும் அவர் விளக்கினார். ஆனால் இம்முறை 31ஆம் திகதி விடுமுறை நாளாக இருப்பதால், புதிய முடிவுகள் இன்றைய உலக சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு ஏற்படுமா என்பது குறித்து தற்போதைக்கு திட்டவட்டமாக கூற முடியாது எனவும், பல்வேறு சுற்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார். இருப்பினும், பெரிய அளவிலான விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவு எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், தற்போதைய எரிபொருள் விலைகள் முன்பு காணப்பட்ட உச்சத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளன என்றாலும், யுத்தத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் இன்னும் அதிகமாகவே உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு கொள்கலன் டீசலின் விலை ஏப்ரல் மாதத்தில் 290 அமெரிக்க டொலராக இருந்தது தற்போது 140–150 டொலர் வரையில் குறைந்துள்ளதாகவும், ஆனால் முன்பு இது 80–90 டொலர் மட்டத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஆகஸ்ட் மாதம் வரையிலான எரிபொருள் கொள்வனவு ஒப்பந்தங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதால், செப்டெம்பர் மாதம் வரை நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.



