நாட்டில் இன்றும் பலத்த மழை சாத்தியம்
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தூறல் மழை படிப்படியாக அதிகரித்து, இன்று முதல் கனமழையாக வலுப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 80 கி.மீ. தொலைவில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
பலத்த மழை பெய்யக்கூடும்…
இதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்தோடு, வடக்கு மாகாணத்தில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
வடமேல் மாகாணத்திலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.




