QR கொடுப்பனவுகளுக்கான சேவைக்கட்டணம் நாளை முதல் இரத்து

இலங்கையில் காசுப் பயன்பாட்டைக் குறைத்து, டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், கியூ.ஆர். குறியீடு மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (06) முதல் ‘பூச்சிய வர்த்தக தள்ளுபடி வீதம்’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை (6) நடைபெறவுள்ள விசேட நிகழ்வின் போது ஜனாதிபதியினால் இந்த வசதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
5,000 ரூபாவிற்கும் குறைவான பெறுமதியுடைய கியூ.ஆர். பணப்பரிமாற்றங்களின் போது, பணம் அனுப்புபவர் அல்லது பெறுபவர் என இருவரிடமிருந்தும் எவ்வித மேலதிக சேவைக்கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.
இதற்கான செலவினங்களை அரச மற்றும் தனியார் வங்கிகள் பொறுப்பேற்க இணங்கியுள்ளன. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது மிகவும் இலகுவாக அமையும்.
இந்த வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுச் சீட்டிழுப்புகள் மற்றும் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அரசாங்கம் அடிப்படை டிஜிட்டல் கட்டமைப்பை வழங்கும் வேளையில், தனியார் நிதிநுட்ப நிறுவனங்கள் அதன் மேல் செயலிகளை உருவாக்கிச் செயல்படும் ஒரு கூட்டு மாதிரியை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது.
இலங்கையில் தற்போது 20 இற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் 30 இற்கும் மேற்பட்ட மொபைல் செயலிகள் ‘லங்கா கியூ ஆர்’ வசதியை வழங்குகின்றன. இருப்பினும், அதன் பயன்பாடு இன்னும் குறைவாகவே உள்ளது.
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு தரவுகளின்படி, மாதமொன்றுக்குச் சராசரியாக 90,000 கொடுக்கல் வாங்கல்களே கியூ.ஆர். மூலம் நடைபெறுகின்றன.
ஒரு சராசரி கியூ.ஆர். பரிமாற்றத்தின் பெறுமதி 5,000 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்படுகின்றது.
இந்த புதிய ‘பூச்சியக் கட்டண’ வசதி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், இலங்கையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் பல மடங்கு அதிகரிக்கும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.



