யாழில் இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் அமெரிக்கா ஈரான் யுத்தத்தை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் – வடமராட்சியில் குஞ்சர் கடை, நெல்லியடி மந்திகை, கிராமக்கோடு பருத்தித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர் .
திருகோணமலை எரிபொருள் நிலையங்களில் மக்கள்
இதேவேளை திருகோணமலை நகரத்தின் லிங்கநகர், கிண்ணியா, மூதூர் மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் அச்சம்
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் தீவிர போர்ப் பதற்ற நிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் முன்கூட்டியே எரிபொருளைச் சேமித்து வைக்கும் நோக்கில் மக்கள் இவ்வாறு திரண்டுள்ளனர்.
நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இருப்பினும், சர்வதேச ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் தூண்டப்பட்ட இந்த அச்சம், இயல்பு நிலையைப் பாதிக்கும் வகையில் வரிசைகளை உருவாக்கியுள்ளது.
இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



