உள்நாடுவானிலை

3500 பேரை பாதித்த அனர்த்தம் – மூடப்பட்ட வீதிகள்

Desktop Image Mobile Image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற வானிலை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கி

இந்நிலையில் யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவர் மீது மின்னல் தாக்கியது.

பாதுகாப்பு நிலையங்களில்

மேலும்  7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் 8 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

அதிகபட்சமாக புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்த்தேக்கங்கள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 19 பிரதான நீர்த்தேக்கங்களும் 19 நடுத்தர நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன.

அநுராதபுரம் – ராஜாங்கனை, பதுளை – அம்பேவெல, அம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்கள் இதில் அடங்கும்.

இதேவேளை அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

இதன் காரணமாக இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர கொத்மலை பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொத்மலை – கம்பளை (B431) பிரதான வீதி இன்று (14) பிற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ்  தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம்

முன்னர் மண்சரிவு ஏற்பட்டு வீதி சேதமடைந்திருந்த பரகம்மன பகுதியில், தற்போது பெய்து வரும் மழையினால் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியூடான போக்குவரத்தைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ​

 

 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று (14) மாலை வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (15) காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தீவிரமாக காணப்படுவதுடன், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அது இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button