மட்டக்களப்பில் துயரம்: வீதியைக் கடக்க முயன்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பலி

மட்டக்களப்பு (Batticaloa)-  மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம்- 6 வகுப்பில் கல்வி கற்றுவந்த மகேந்திரன் ரயூவன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் பின்னர் தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்ற இச்சிறுவன் பிரதான வீதியைக் கடக்கின்றபோது மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்யததாகவும் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவையிலுள்ள மரண வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தவேளை சிறுவன் திடீரென வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button