நள்ளிரவில் வெளியான உயர்தர பெறுபேறுகள் – முழு விவரம் இங்கே!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை Doenets.lk மற்றும் Results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும்.
மேலும், இன்று (01.04.2026) முதல், மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி onlineexams.gov.lk இணையதளத்தின் மூலம் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்வி அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 06.04.2026 முதல் 22.04.2026 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீளாய்வு முடிவுகள் வெளியான பின்னரே பாடசாலைகளுக்கான அச்சிடப்பட்ட பெறுபேற்று அட்டவணைகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற நேரடி அழைப்பு இலக்கம் அல்லது 0112784208, 0112786616, 0112784537, 0112785413 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.
மேலும் 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் மற்றும் gcealexam@gmail.com மின்னஞ்சல் வழியாகவும் விசாரணைகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



