மத்திய கிழக்கு யுத்தத்தில் நாட்டுக்கு எந்த அழுத்தங்கள் வந்தாலும் அடிபணியமாட்டோம்

மத்திய கிழக்கு யுத்த நிலையில் வலுச் சக்தியை நாங்கள் முறையாக பேணுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே பயணிக்கின்றோம். என்றாலும் விநியோக வலையமைப்பில் பிரச்சினை ஏற்படும் நிலைமை உள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை உள்ளது. அதனால் இவற்றை சீர் செய்ய தேவையான ஒத்துழைப்பை சகலரிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்

இதேவேளை, இந்த யுத்தத்தில் எமது நாட்டுக்கு எந்த அழுத்தங்கள் வந்தாலும் நாம் அடிபணியமாட்டோம் அவ்வாறு அடிபணிந்திருந்தால் அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டு யுத்த விமானங்களுக்கு மத்தள விமான நிலையத்தில் அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்திருக்க மாட்டோம். நாம் ஒரு பக்கச் சார்பாக நடந்திருந்தால் மத்திய கிழக்குப் போர் மத்தள மற்றும் கொழும்பு துறைமுகத்திலும் இடம்பெற்றிருக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மத்திய கிழக்கு யுத்தத்தில் நாட்டுக்கு எந்த அழுத்தங்கள் வந்தாலும் அடிபணியமாட்டோம்

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (20) இரண்டாவது  நாளாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மத்திய  கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை தொடர்பிலும் அதன்மூலம் உலகில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் நடக்கின்றன. இந்த விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் நடுநிலை கொள்கையிலேயே இருக்கின்றோம். எமது தாய் நாட்டின் கௌரவத்தையும், நியாயம் தொடர்பான பிரச்சினையிலும் மற்றும் சர்வதேச ஏற்றுக்கொள்ளலையும் நாங்கள் நடுநிலையில் இருந்தாலே பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறான   அழுத்தங்கள். கஷ்டங்கள் வந்தாலும் நாங்கள் எமது நடுநிலையை கைவிட மாட்டோம்.

இந்நிலையில் நாங்கள் ஒரு குழுவுக்கு சார்பாக இருக்கின்றோம் என்றும், சில தீர்மானங்களை தேவையான நேரங்களில் எடுக்கவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் பொய்யாகும். குறிப்பாக ஈரான் கப்பல் விடயத்தில் மூன்று கப்பல்கள் 9-13ஆம் திகதிகளில் நாட்டுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள பெப்ரவரி 26ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வந்த நிலையில், அன்றைய தினத்திலேயே மாலை ஐக்கிய குடியரசினால் கடற்படைக்கு சொந்தமான இரண்டு தாக்குதல் விமானங்களுக்கு மத்தளை விமான நிலையத்தில் அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வேளையில் இரண்டு கடிதங்கள் எமது மேசையில் இருந்தன.

 

 

நாங்கள் நடுநிலையாக இருந்து போர் மூழும் சூழல் நிலவியதால் இரண்டு தரப்பினருக்கும் அனுமதி வழங்கவில்லை. இவ்வேளையில் நாங்கள் கப்பலுக்கு இடமளித்தால் மற்றைய தரப்புக்கும் இடமளித்திருக்க வேண்டி வந்திருக்கும். அவ்வேளையில் ஒரு பக்கச் சார்பாக நடந்துகொண்டிருந்தால் எம்மில் தூரத்தில் இருந்த போர் நிலைமை மத்தளை மற்றும் கொழும்பு துறைமுகத்தை நோக்கியும் வந்திருக்கும். அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை.

 

 

இதேவேளை 27ஆம் திகதி ஈரான் கப்பலில் மாலுமியொருவர் கீழே விழுந்து காயமடைந்திருந்தமையினால் அவரும் இன்னுமொரு சிப்பாயும் கப்பல் உதவி நிறுவனமொன்றின் ஊடாக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச சமவாயத்திற்கு அமைய நாங்கள் அந்த நடவடிக்கையை எடுத்தோம். இந்நிலையில் 4ஆம் திகதி ஈரான் கப்பலொன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்தது. அது எமது கடல் எல்லையில் நடக்கவும் இல்லை. ஆனால் சர்வதேச கடல்சார் சமவாயங்களுக்கு அமைய நாங்கள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து சடலங்களை மீட்டதுடன், உயிருடனும் பலரை மீட்டோம். மனிதாபிமான ரீதியில் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்தோம்.

பின்னர் மறுநாள் இன்னுமொரு கப்பல் எமது துறைமுகத்தில் அனுமதி கோரப்பட்டது. நடுநிலையை பேணி அந்தக் கப்பலில் இருந்த 206 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் எமது பொறுப்பில் எடுத்துள்ளோம். கப்பலையும் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த சடலங்களை அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

 

 

எப்போதும் நாங்கள் நீதி, நியாயம் என்பதனை சர்வதேச மேடைகளுக்கு கொண்டு செல்கின்றோம். எமது செயற்பாடுகள், எமது கொள்கைகள் உள்ளிட்ட அனைத்தும் எமது நடுநிலையை பேணியாதாகவே இருக்கும். நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலேயே தீர்மானங்களை எடுப்போம்.

இதேவேளை  ஐக்கிய குடியரசின் இரண்டு விமானங்களும் 4 மற்றும் 8ஆம் திகதிகளில் எமது விமான நிலையத்தில் தரையிறங்கி இருக்கவே அனுமதி கோரப்பட்டது. அவர்களிடம் கப்பலை தாக்கும் 8 ஏவுகணை கள் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நாங்கள் ஐக்கிய அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை இருப்பதால் யுத்தத்தில் பங்காளியாவதை தடுக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் யுத்தம் தொடர்பான நடவடிக்கையில் எமது உடன்படிக்கை தொடர்புபட்டது அல்ல. நாங்கள் சர்வதேச கொள்கைகளை பேணியே நடந்துகொள்கின்றோம்.

 

 

மத்திய  கிழக்கை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் உள்ளன. அதாவது எரிபொருள் மற்றும் எமது நாட்டவர்கள் அங்கு பணியாற்றுகின்றனர். இந்த விடயத்தில் எமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்த வேண்டும். நாங்கள் முறையாக திட்டமிட்டு இதில் செயற்படுகின்றோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் நீண்ட கால டென்டர் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வருகையில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. அவை சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களின் ஊடாகவே வருகின்றன. ஆனால் மசகு எண்ணெய் வருவதிலேயே தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. டீசல், பெட்ரோல் மற்றும் மசகு எண்ணெய்க்காக மார்ச் 5ஆம் திகதி டென்டர் விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எரிபொருளை கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எரிபொருள் விநியோகத்திற்கு உள்ள மாற்று வழிகள் அனைத்தையும் முன்னெடுக்கின்றோம்.

 

 

இதேவேளை டொலர் பெறுமதி உயர்வடைந்தாலோ உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலோ எமது எரிபொருள் விலை அதிகரிக்கலாம். 2022இல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதற்கு டொலர் பெறுமதி உயர்ந்தமையே காரணமாகும். 185இல் இருந்த டொலர் பெறுமதி 370 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டது. இதன்போது எரிபொருள் விலையும் பெறுமளவில் அதிகரித்தது. அதேபோன்று சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போதும் இங்கு விலைகள் அதிகரிக்கப்படும். நிறுவனங்களுக்கு விலைகளை அதிகரிக்க அனுமதித்துள்ள போதும்    பெட்ரோலிய கூட்டுத்தாபத்தின் சட்டத்தின் பிரகாரம் விலைகளை கூட்டுத்தாபனமே தீர்மானிக்கும். இவ்வாறான விலைகளை தீர்மானிக்கும் போது கியூஆர் முறைமை பயனுள்ளதாக இருக்கும். விலை அதிகரிக்கும் என்று வரிசைக்கு செல்லவும் முடியாது. கறுப்பு சந்தை வியாபாரிகளும் உருவாக முடியாது. கறுப்பு சந்தை வியாபாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று எரிவாயு விநியோகம் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது அதற்கான பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. சந்தையில் சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாடு இருக்கின்றது. நாங்கள் தனியார் துறையின் 20 வீதத்தையும் நாங்களே விநியோகிக்க வேண்டியுள்ளது. ஆனால் இதில் நெருக்கடி ஏற்படது என்று கருதுகின்றோம்

 

வலுச் சக்தியை நாங்கள் முறையாக பேணுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே பயணிக்கின்றோம். பொருளாதாரம் வீழாத வகையில் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமைச்சரவை, விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்டோர் முறையாக பணியாற்றுகின்றனர். இதில் இணைந்துகொள்ளுங்கள். விநியோக வலையமைப்பில் பிரச்சினை ஏற்படும் நிலைமை உள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை உள்ளது. ஆனால் இவற்றை சீர் செய்ய தேவையான ஒத்துழைப்பை சகலரிடம் இருந்தும் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Related Articles

Back to top button