உள்நாடுவடக்கு மாகாணம்வவுனியா

வவுனியா- பம்பைமடுவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்

Desktop Image Mobile Image

வவுனியா, பம்பைமடு மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுருவல் மற்றும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

யானை ஊடுருவல் தொடர்பாக கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது, யானைகளிடமிருந்து கிராமத்தைப் பாதுகாக்க விரைவில் பாதுகாப்பு வேலிகள் (Electric Fences) அமைத்துத் தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

இருப்பினும், இந்தக் கூட்டம் நடைபெற்று ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அழிவுகளை ஏற்படுத்தி வருவது மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பம்பைமடு – கல்வெளிப் பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், பல வருடங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன. தென்னை மற்றும் ஏனைய பலன் தரும் மரங்கள் இவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்படுவதால், தமது பொருளாதார வாழ்வாதாரம் அடியோடு சீர்குலைந்துள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

 

 

“பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் வரை எமது பயிர்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பம்பைமடு மக்கள் ஒவ்வொரு இரவையும் மிகுந்த ஏக்கத்துடனும், அச்சமுடனும் கழித்து வருகின்றனர்.

யானைகளின் ஊடுருவலைத் தடுக்க நிரந்தரத் தீர்வை விரைந்து காணுமாறும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button