போருக்கு முற்றுப்புள்ளி வைக்க ஈரான் ஜனாதிபதி முன்வைத்த 3 முக்கிய நிபந்தனைகள்

போரினை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநிறுத்துவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவரின் கருத்துப்படி, முதலில் டெஹ்ரானின் நியாயமான உரிமைகள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இரண்டாவது, போர் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் நடைபெறாத வகையில் உறுதியான சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதும் மூன்றாவது முக்கிய நிபந்தனையாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால்தான் நிலையான அமைதி ஏற்பட முடியும் என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலங்களில் அதிகரித்து வரும் மத்திய கிழக்கு பதற்றம் தொடர்பில் உலக நாடுகள் கவலை வெளியிட்டு வரும் நிலையில், இந்நிபந்தனைகள் குறித்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவலாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.



