மிகிந்தலையில் சோக சம்பவம் – பிள்ளைகளை காப்பாற்றிய தந்தை உயிரிழப்பு

மிகிந்தலை – மருதன்குளம் குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற தந்தை ஒருவர் நீரில் மூழ்கி நேற்று (17) மதியம் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, உயிரிழந்தவர் மருதன்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராகும்.
அவர் தனது நண்பருடன் குளத்திற்கு சென்றிருந்த போது, அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் நீரில் மூழ்குவதைக் கவனித்துள்ளார்.
அவர்களை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக குளத்தில் குதித்த அவர், எதிர்பாராத விதமாக நீரில் சிக்கி மூழ்கியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், 11 மற்றும் 12 வயதுடைய அந்த இரு சிறுவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




