வவுனியா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு: பொலிஸார் நடத்திய இரத்ததான முகாம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் விசேட இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம், வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரியரட்ண தலைமையில் இடம்பெற்றது.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான நடவடிக்கையின் மூலம் கணிசமான அளவு குருதி சேகரிக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட குருதி, வைத்தியசாலையின் அவசர தேவைகளுக்காக வவுனியா இரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சமூகப் பணிகளில் பொலிஸார், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்படுவது, அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



