வவுனியாஉள்நாடுசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியாவில் வீடு புகுந்து பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: ஐவர் கைது; சொத்துக்கள் மீட்பு

Desktop Image Mobile Image

வவுனியா மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்து பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, பெருமளவான நகைகள், இரத்தினக்கற்கள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வீட்டுக்குள் நுழைந்த குழுவினர் அங்கிருந்த வாகன சாரதி ஒருவரை வாள் வெட்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வீட்டின் உரிமையாளரான பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்னால் கட்டியதுடன், அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றியுள்ளனர். தொடர்ந்து மூவர் இணைந்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், சுமார் 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண்டுகளுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் காணி, வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் காணப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

விசாரணைகளின் ஆரம்ப கட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய மாத்தறை, உக்குவெல பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய சிவலாங்குளம், களேமிதுனுவெல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக நடவடிக்கைகளில் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் கொள்ளையிடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதில் இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்குகின்றன.

மேலும், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க மற்றும் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button