ஹோர்மூஸ் பதற்றம் மீண்டும் தீவிரம்: ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்

தெற்கு ஈரானின் முக்கிய இராணுவ அமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா இன்று விரிவான வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் இந்த தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலின் போது ஈரானின் ரேடார் கண்காணிப்பு மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் பிற பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட சுமார் 80 இராணுவ இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடரும் இரு நாடுகளின் பதற்றம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளுக்கு எதிராக ஈரான் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது..
இந்தச் சம்பவங்களின் தொடர்ச்சியாக உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தன.
அமைதி முயற்சிக்கு பின்னரும் நீடித்த முரண்பாடு
பாகிஸ்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்த முயற்சிகளின் மூலம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பின்னர் அமைதி ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஈரான் பின்னர் அறிவித்தது. மேலும், தங்களது அனுமதியின்றி அந்தக் கடல் வழித்தடத்தை பயன்படுத்தும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த மாதம் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற சில சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவங்களே அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைக்கு காரணமாக அமைந்ததாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், ஓமன் வளைகுடா பகுதியில் உள்ள லிமாஹ் கடற்பகுதிக்கு அருகில் ஹோர்மூஸ் நீரிணையை நோக்கிச் சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் காரணமாக சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைகள் எழுந்துள்ளன.
உலக சந்தையின் கவனம்
ஹோர்மூஸ் நீரிணை உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் கடல் வழித்தடமாகக் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு இராணுவ பதற்றமும் சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்தகட்ட இராணுவ மற்றும் இராஜதந்திர முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.




