
இலங்கையின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, சிறுவர்களிடையே வெவ்வேறு வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் நீரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதால், போதுமான அளவு நீரை அருந்துவது அவசியம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சாதாரண வயது வந்த ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று லீற்றர் நீரை அருந்துவது பொருத்தமானது எனக் குறிப்பிட்ட வைத்தியர், சிறுவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப போதுமான அளவு நீர் வழங்கப்படுவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக போதுமான அளவு நீரை அருந்தாமல் இருப்பது சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, போதிய நீர்ச்சத்து இல்லாத நிலையில் திறந்தவெளிகளில் பணியாற்றுதல் அல்லது சுற்றுலா உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வெப்ப அதிர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய நிலை சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கும் வழிவகுக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நீர் போத்தல் ஒன்றை உடன் எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தற்போதைய காலநிலை மாற்றங்களால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறுவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளை மட்டுமே வழங்குவதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
செயற்கை பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்த்து, எலுமிச்சை, தோடம்பழம், இளநீர், கஞ்சி மற்றும் சூப் போன்ற திரவ உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குமாறும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், சிறுவர்கள் கைபேசிகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.




