
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக அதிகரித்துள்ளதுடன், டெங்கு காரணமாக பதிவாகியுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலின்படி, நாடளாவிய ரீதியில் 96 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தற்போது டெங்கு அதிக அபாயம் கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 48,725 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இது மொத்த நோயாளர்களில் 52.96 சதவீதமாகும்.
இதன் காரணமாக நாட்டில் டெங்கு அதிகளவில் பரவும் மாகாணமாக மேல் மாகாணம் காணப்படுகிறது.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 3,700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் அதிக பாதிப்பு
மாதாந்த அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதற்கு முன்னதாக ஜூன் மாதத்தில் 21,533 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை முறையாக அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றி, சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது டெங்கு பரவலைக் குறைக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல் உள்ளிட்ட டெங்கு அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், தாமதிக்காமல் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




