உள்நாடு

இலங்கையில் ஆரம்பமாகும் விசேட பஸ் சேவை

Desktop Image Mobile Image

 

மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு புதிய விசேட பேருந்து சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக ரூ. 430.7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இலகுவாக ஏறக்கூடிய ‘தாழ்ந்த தளம்’ கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடந்த 10 ஆம் திகதி கொண்டு வரப்பட்டுள்ளன.

33 ஆசனங்கள் கொண்ட ஒவ்வொரு பேருந்திலும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னோடி திட்டமாக மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரை காலை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை சேவை இயக்கப்படவுள்ளது.

 

 

மேலும், மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையிலும் இந்த சேவை அமைக்கப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பஸ் தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

 

 

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Related Articles

Back to top button