அமரர் இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (11) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் மரியாதையுடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமை தாங்கினார்.
நிகழ்வின் போது அமரர் இரா. சம்பந்தனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அவரது தமிழ் மக்களுக்கான அரசியல் சேவைகளும், நீண்டகால பொதுப்பணிகளும் நினைவுகூரப்பட்டன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அமரர் இரா. சம்பந்தனின் அரசியல் பணிகளையும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




