வடிகானில் சிக்கிய நபர் 2 மணி நேர போராட்டத்தின் பின் மீட்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியின் நாவற்குடா பகுதியில் உள்ள வடிகானுக்குள் சிக்கிய நபர் ஒருவர், சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த மீட்புப் பணிக்குப் பின்னர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
நாவற்குடா கத்தாமரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் நேற்று மாலை குறித்த நபர் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து காத்தான்குடி பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் வழங்கினர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர், சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இரவு 7.30 மணியளவில் அந்த நபர் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பும் மக்கள் திரளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட நபர் அப்பகுதியைச் சேர்ந்தவர் எனவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் மனநல பாதிப்புக்குள்ளானவர் எனவும், அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




