மலையகம்உள்நாடு

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – மாணவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

கண்டி மாவட்டத்தின் மபகந்தா பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரகரமான விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்களும் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நாவலப்பிட்டிய – மபகந்த பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது வீதியோரத்தில் இருந்த பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நேர்ந்தபோது முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவரும், இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

 

எனினும், முச்சக்கரவண்டியின் சாரதி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் நாவலப்பிட்டி பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை அகற்றுமாறு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த அலட்சியமே இந்த துயரகரமான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button