நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்ததாக கொழும்பு பெண் கைது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழாவின் போது பெண்ணொருவரின் தாலிக்கொடியை அறுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் ஆலய வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அறுக்கப்பட்டதாகக் கூறப்படும் தாலிக்கொடியும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
