கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து: 21 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அதே திசையில் பின்னால் வந்த மற்றுமொரு பாரவூர்தி அதன்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதி உதவியாளராகப் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28 வயதுடைய பாரவூர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




