யாழில் கடத்தல், வாள்வெட்டு சதி: இரத்தக் கறைகள் படிந்த கார், இரு வாள்களுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து சந்தேகநபர்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு அபாயகரமான கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 5 ஆம் திகதி யாழ் இந்துக் கல்லூரி அருகில் இளைஞர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.
பின்னர் அந்த இளைஞன் கைதடி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது ஆடைகள் கழற்றப்பட்ட நிலையில் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை அருகில் விடப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாகச் சென்ற காரை வீதிப் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் நிறுத்த முயன்றபோதும், அது நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளது. இதையடுத்து குறித்த வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் இடைமறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த சோதனையில், காருக்குள் இருந்து இரண்டு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டதுடன், வாகனத்தின் கதவுகள் மற்றும் ஆசனங்களில் இரத்தக் கறைகள் காணப்பட்டுள்ளன. மேலும், இரத்தம் படிந்த சட்டை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சுமார் 2.5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலுக்கு உள்ளான இளைஞர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் முழுமையான பின்னணியை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் மேற்பார்வையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




