இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.9 ரிக்டர் அளவில் பதிவு

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திரா பகுதியில் இன்று (15) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
USGS தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5.54 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி Pematangsiantar நகருக்கு அருகில், பூமிக்கு அடியில் சுமார் 183.2 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் மேடான் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 126 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடி உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்தோனேசியாவில் இன்று முன்னதாக இடம்பெற்ற 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அந்த நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சுமாத்திராவில் பதிவான 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஆழமான பகுதியில் ஏற்பட்டுள்ளது.
சுமாத்திராவில் ஏற்பட்ட இந்த இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ள நிலையில், நில அதிர்வுகளின் தாக்கம் மற்றும் சேதங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.




