ஹைதராபாத்தில் அதிர்ச்சி: மாம்பழம் சாப்பிட்ட பின் 2 சிறுமிகள் உயிரிழப்பு

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்டதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கு உள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பீதர் பகுதியைச் சேர்ந்த வைஜிநாத் மற்றும் இந்துமதி தம்பதியினர் ஹைதராபாத்தில் வசித்து வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், அவர்களது உறவினரான ரேணுகா, நாராயணகுடா பகுதியில் வாங்கிய மாம்பழங்களை குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்துமதி மற்றும் அவரது நான்கு மகள்களும் அந்த மாம்பழங்களை சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திடீரென வயிற்றுவலி மற்றும் வாந்திப்போக்கு ஏற்பட்டதால், அவர்கள் கச்சிகுடா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், குடும்பத்தின் மூன்றாவது மகளான 17 வயதுடைய புவனேஸ்வரி கடந்த 08 ஆம் திகதி உயிரிழந்தார். தொடர்ந்து, இளைய மகளான 10 வயதுடைய சந்தியாவும் கடந்த 09 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, தாய் இந்துமதி மற்றும் மற்ற இரண்டு மகள்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளின் உயிரிழப்பு தொடர்பில் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாராயணகுடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்று அங்கிருந்த உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கைகள் கிடைத்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாம்பழங்களே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணிகள் உள்ளனவா என்பது தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




