
ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர் கிண்ண’ கால்பந்து தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியின் போது திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
யங் மேட்ஸ் எஃப்சி மற்றும் நோர்வூட் சன்ரைஸ் எஃப்சி அணிகளுக்கு இடையிலான போட்டியின் இறுதிக்கட்டத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, போட்டி நிறைவடைய ஏழு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் மோதல் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது யங் மேட்ஸ் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
திடலில் ஏற்பட்ட பதற்றம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சில பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால், வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு போட்டியின் எஞ்சியிருந்த ஏழு நிமிடங்களை வேறொரு மைதானத்தில் நடத்த அனுமதி வழங்குமாறு நோர்வூட் சன்ரைஸ் எஃப்சி அணி போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவை போட்டி ஏற்பாட்டாளர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




