
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இதில் சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்கள் காலை 9.00 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி பரீட்சைக்கு தயாராகும் வகையில், பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையத்தை சென்றடைவது சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படவுள்ளது. அது காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறிய இடைவேளையின் பின்னர், முதல் வினாத்தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெறும்.
மாணவர்கள் வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிடுவதுடன், தெளிவான கையெழுத்தில் வினாக்களுக்கு விடையளிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
