இலங்கையில் தங்க விலையில் திடீர் சரிவு – ஒரு பவுணுக்கு ரூ.8,000 குறைவு

இலங்கையில் இன்று (11) தங்க விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்துள்ள நிலையில், தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட காரணிகள் உள்நாட்டு தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தைத் தரப்புகள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக விலை மாற்றங்களை சந்தித்து வரும் தங்கச் சந்தையில், இன்றைய விலை வீழ்ச்சி நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.




