
2025 (2026) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பச் செயல்முறை, பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என அனைவருக்கும் இணையவழி மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காலக்கெடு முடிவடைவதற்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள “எமது சேவைகள்” (Our Services) பிரிவின் கீழ் காணப்படும் “Exam Information Centre” சேவையின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.
ஏற்கனவே கணக்கை உருவாக்கியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம். புதிய விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி முதலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
மறுபரிசீலனைக்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை கடன் அட்டை (Credit Card), வரவு அட்டை (Debit Card) அல்லது தபாலகத்தின் ஊடாக செலுத்துவதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கட்டணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய பின்னர், விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவானதை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தியும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது தொழில்நுட்ப உதவி தேவையெனில், 1911 என்ற உதவி இலக்கத்தையோ அல்லது 011 278 5231 உள்ளிட்ட பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலக்கெடு நிறைவடைவதால், மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து பரீட்சார்த்திகளும் தாமதமின்றி விண்ணப்பச் செயல்முறையை நிறைவு செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.




