சினிமா

தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

Desktop Image Mobile Image

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும், ‘இயக்குநர் இமயம்’ எனப் போற்றப்பட்டவருமான பாரதிராஜா இன்று (10) தனது 84ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில காலமாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை இல்லத்தில் இன்று அதிகாலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1977ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார். கிராமிய வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினார்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை அவர் இயக்கியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்குரியது.

திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாது, நடிகராகவும் பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர், அண்மைக் காலங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார்.

அவரது திரைப்படப் பங்களிப்புகளைப் பாராட்டி இந்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button