தெஹிவளையில் வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி அதிகாலை சுமார் 3.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் முன் கதவைத் தட்டிய குறித்த நபர், வீட்டில் இருந்தவர்கள் கதவைத் திறந்த பின்னர் கைக்குண்டை வீட்டுக்குள் வீசியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் வீட்டுக்கு அருகிலிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டு வெடித்ததில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் சிறுவர்களின் 55 வயதுடைய தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவருக்கு இதற்கு முன்னர் எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



