
அயகம, இந்தொலவத்தை பகுதியில் சுமார் ஆறு நாட்களாக காணாமல் போயிருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கலே விகாரை அருகிலுள்ள பகுதியில் குறித்த நபர் பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் பணிப்புரைக்கு அமைய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவின் மேற்பார்வையில் இராணுவப் படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நீண்ட நேரம் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர், பள்ளத்தில் இருந்து உயிரிழந்தவரின் சடலம் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு நாட்களுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், இந்த மரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் காரணங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



