A9 வீதியில் பேருந்து விபத்து – 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நிகவரெட்டியவில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 12 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாரம்மல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு அநுராதபுரம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தபோதே பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாகவே விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




